உலகளாவிய தங்க சந்தையில் விலை ஏற்றம் தொடர்கிறது. அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள், டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள், உலக சந்தையின் அலைச்சல்கள் ஆகியவை காரணமாக தங்க முதலீடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட புதிய கணிப்பில், 2025 இறுதிக்குள் தங்கத்தின் விலை ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $3,700 ஆகவும், 2026 நடுப்பகுதிக்குள் $4,000 ஆகவும் உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தனியார் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர் சொத்துக்களில் இருந்து தங்கத்திற்கு பெருமளவில் மாறினால், விலை $4,500 – $5,000 வரை சென்று சேரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தையை பொருத்தவரை, 10 கிராம் 24 காரட் தங்கம் விரைவில் ரூ.1,55,000 வரை உயரக்கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் மதிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இன்று (செப்டம்பர் 5) காலை 10.16 மணிக்கு MCX-இல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,06,928 ஆக உள்ளது. இது முந்தைய நாளைவிட ரூ.511 அதிகமாகும். இன்று தங்கம் ரூ.1,06,639 என்ற குறைந்த விலையையும், ரூ.1,06,928 என்ற அதிகபட்ச விலையையும் தொட்டது.
கோல்ட்மேன் சாக்ஸ் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைத்தால் தங்க விலை மேலும் உயரும்.
டொனால்ட் டிரம்பின் அழுத்தங்களால் டாலர் மதிப்பு குறையக்கூடும்.
ரூபாய் மதிப்பு வலுவடைந்தால், இந்தியாவில் தங்க தேவையும் விலையும் அதிகரிக்கும்.
முன்னதாக $4,000 என்ற மதிப்பீடு இருந்த நிலையில், தற்போது $5,000 என்ற புதிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலைகளே இதற்குக் காரணம் என கோல்ட்மேன் சாக்ஸ் விளக்கியுள்ளது.















