சென்னை :
சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்து, தற்போது ரூ.76,280க்கு விற்கப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.9,535 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், பணவீக்கம், அரசியல் பதற்றங்கள் போன்றவை முதலீட்டாளர்களை தங்கம் வாங்கத் தூண்டி வருகின்றன. இதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் மந்தநிலை சூழ்நிலை தங்கத்தின் தேவையை அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்க விலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில், இந்தியாவில் 10 கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலை ரூ.1,03,380 வரை சென்றுள்ளது. இது கடந்தாண்டை விட சுமார் 15% அதிகம் ஆகும்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.88.28 வரை குறைந்துள்ளது.
இந்தியாவிலும் சீனாவிலும் நிலவும் பொருளாதார சிக்கல்கள், மந்தநிலை ஆகியவை தங்கத்தின் தேவை தொடர்ந்து உயரும் நிலையை உருவாக்கியுள்ளன.
நிபுணர்கள் தெரிவிப்பதாவது :
“பணவீக்கம், அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டுத் தேவைகள் காரணமாக 2025-ஆம் ஆண்டிலும் தங்க விலை தொடர்ந்து உயரும் வாய்ப்பு அதிகம்,” என்று கூறினர்.