சென்னை: தங்கம் விலைகள் தொடர்ந்து ஏற்றம் காணும் நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மீண்டும் ரூ.1,120 அதிகரித்துள்ளது. இதனால், ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2,800 உயர்வு பதிவாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சென்னை சந்தையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10,640க்கும், ஒரு சவரன் ரூ.85,120க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக போர்கள், பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவை தங்க விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், பொதுமக்கள் மட்டுமல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடமும் முக்கிய முதலீடு ஆகி வருகிறது.
அடுத்த மாதங்களில் தங்க விலையில் திடீர் சரிவு ஏற்பட்டாலும், பின்னர் மேலும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். புவிசார் அரசியல் பிரச்சனைகள் சீராகாவிட்டால், 2026 ஆம் ஆண்டிலும் தங்க விலை ஏற்றம் தொடரும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.