காலை தங்க விலையில் சரிவு ; சில மணி நேரத்தில் மீண்டும் ஏற்றம்

சென்னை :
ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே வரும் தங்க விலை, இன்று காலை குறைந்திருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் சூழல், அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த வாரம் தங்கம் வரலாற்றிலேயே அதிக விலையை எட்டி, சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், வார தொடக்கமான இன்று காலை தங்க விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, சவரன் ரூ.79,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் சில மணி நேரங்களிலேயே விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,060-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்வைக் கண்டுள்ளது. சில்லறை சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் நிலையில், தங்க விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருப்பது நகை வாங்கும் பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version