சென்னை :
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.140 அதிகரித்து, ரூ.10,005 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.80,040 என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 1) ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், மார்ச் 4ஆம் தேதி ரூ.64,080க்கும், ஏப்ரல் 22ஆம் தேதி அப்போதைய உச்சமாக ரூ.74,320க்கும் விற்பனையானது. மே மாதத்தில் சற்று குறைந்த விலையில் இருந்த தங்கம், ஜூன் 2ஆம் தேதி ரூ.71,600க்கு விற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்ட தங்க விலை, செப்டம்பர் 1ஆம் தேதி ரூ.77,640 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தற்போது, வெறும் 5 நாட்களிலேயே மேலும் உயர்ந்து, ரூ.80,000-ஐ கடந்துள்ளது.
இவ்வாறு, கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.22,840 உயர்ந்துள்ளது. தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அவசியத் தேவைக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் வாங்குபவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கம் வெறும் உலோகம் மட்டும் அல்ல; இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வோடு கலந்த ஒன்றாக கருதப்படுகிறது. “ஒரு குண்டுமணி தங்கமாவது வீட்டில் இருக்க வேண்டும்” என்ற மனப்பான்மை காரணமாக, விலை உயர்ந்தாலும் வாங்கும் பழக்கம் தொடர்கிறது.
 
			
















