சென்னை: தமிழ்நாடு அரசு, 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் இலவச லேப்டாப் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா காலத்தில் இடைநிறுத்தப்பட்ட இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், 2021-ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, இதை மீண்டும் தொடங்கத் தீர்மானித்தது. கடந்த பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், டெல் மற்றும் ஏசர் நிறுவனங்கள் குறைந்த விலையில் டெண்டர் சமர்ப்பித்துள்ளன.
அதன்படி, 15.6 இன்ச் திரையுடன் கூடிய மடிக்கணினிக்கு டெல் நிறுவனம், வரிகள் இல்லாமல் ₹40,828 என விலை கூறியுள்ளது. அதேபோல், 14 இன்ச் திரையுடன் கூடிய மடிக்கணினிக்கு ஏசர் நிறுவனம் ₹23,385 என விலை நிர்ணயித்துள்ளது.