கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர்மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலத் தகராறும், புகாரும் :
நைனாவுக்கும், அவரது தம்பி மனைவி சரிதாவுக்கும் இடையே நிலம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தகராறு இருந்தது. இதைத் தொடர்ந்து சரிதா, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
மரணத்திற்கு முந்தைய கடிதம் :
இந்த நிலையில், இன்று காலை தனது சொந்த நிலத்தில் தூக்குப்போட்டு நைனா தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய மூன்று பக்க கடிதத்தில், “தம்பி மனைவி சரிதாவின் பொய் புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் தன்னிடம் முறைத்தும், மிரட்டலும் நடத்தியதாக” குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தான் தற்கொலைக்கு முடிவெடுத்ததாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
போலீசார்மீது வழக்கு பதிவு:
தகவல் அறிந்ததும், திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நைனாவின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நைனாவின் மனைவி பழனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா உள்ளிட்ட 7 போலீசார்மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இளையராஜா முதன்மை குற்றவாளியாக உள்ளார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது :
தற்கொலைக்குப் பிறகு, நைனா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். எதிர்கொள்ளக்கூடிய பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், நைனாவின் சொந்த ஊரான ஏ.அத்திப்பாக்கம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.