அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாரதி மாவட்ட அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் முடிவு
எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அளித்தார்.
சீர்காழி அடுத்த திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவராகவும், முன்னாள் எம்எல்ஏவாகவும் உள்ளார். இதற்கு முன்பு அதிமுக-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாரதி முன்னாள் ஒன்றிய குழு தலைவராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.
சீர்காழி (தனி) தொகுதியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பாரதியும் விருப்பமனு அளித்திருந்தார். இதனிடையே சீர்காழி தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சக்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பி.வி.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், சீர்காழி சட்டபேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனது மாவட்ட அவை தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை கழக பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளதாகவும், 2026 சட்டபேரவை தேர்தல் வேட்பாளர் அறிவிப்பால் சீர்காழி தொகுதி வேட்பாளர் தேர்வில் மிகுந்த மனம் வருத்தம் அடைவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கழகத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் மண்டலச் செயலாளர் ஓ.எஸ். மணியன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் ஈடுபட்டு வருவதாக கூறினார். இவர்களோடு இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையில் தனது மாவட்ட கழக அவை தலைவர் பதவி ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். மேலும் என்றைக்கும் கழகத்திற்கும் கழக தலைமைக்கும் விசுவாசம் மிகுந்த தொண்டனாக செயல்படுவேன் என்றார். முன்னாள் எம்எல்ஏ பாரதி தனது பதவியை ராஜினாமா செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

















