சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற கணினி அறையில் தீ விபத்து.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில், புதுப்பட்டினம், செம்பனார்கோயில், பொறையார் போலீஸ் ஸ்டேஷன்களின் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தில் மேல் தளத்தில் உள்ள கணினி அறையில் இருந்து திடீர் புகை வெளியேறியது. திடீரென அங்கிருந்த குளிர்சாதன பெட்டி அமைந்துள்ள பகுதியில் இருந்து அதிக அளவு கரும்புகை வெளியேறி தீப்பற்றியது. கணினி அறையில் இருந்த கணினி சர்வர் மற்றும் மின்சாதன வயர்கள் இந்த தீ விபத்தில் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அறிந்த நீதிபதிகள் உடனடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்த திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது













