மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது :-
மயிலாடுதுறை மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி ஐந்தாண்டுகளை கடந்தும் அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து பல்வேறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி டாக்டர் சுவாமிநாதன் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்க வேண்டும் , விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்து தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றிட வேண்டும் , 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக மாற்றி தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் , பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையப்படுத்துவதை கைவிட்டு அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் , காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர்.

















