மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் கதறல். மூன்று ஆண்டுகளாக புகார் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி மனுக்களை வீசி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை அருகே உள்ள மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன்-சுகன்யா தம்பதியினர் தங்கள் பிள்ளைகளுடன் வந்து இடப்பிரச்சனையில் மூன்று ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் எடுத்து வந்திருந்த பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அளித்த மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மனுக்களை வீசி எறிந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். சுகன்யா அளித்த மனுவில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தான் தன் தந்தை நாகூரான் அனுபவத்தில் உள்ள அரசு நத்தம்சாரி புறம்போக்கு இடத்தில் வசித்து வருவதாகவும் தன் வீட்டிற்கு அருகில் உள்ள காலி மனைதாரர் கலியபெருமாள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட சிலர் தாங்கள் வசிக்கும் இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தன் வீட்டு சுவற்றை இடித்து தள்ளி அலக்கு அரிவாளால் கூரையை பிரித்து எரிந்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இதுகுறித்து ஜாதி வன்கொடுமை சட்டத்தின் படியும், நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மனுவை பெற்றுக் கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகன்யா கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கட்சியை சேர்ந்தவரே கலப்புத் திருமணம் செய்த தன் வீட்டை அபகரிக்க முயல்வதாகவும், தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து தன்னுடைய கடையில் ஒருவரும் பொருட்கள் வாங்க கூடாது என்று மிரட்டுவதாகவும் தலைவர் திருமாவளவன் வந்து கேட்பாரா என்றும் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.

















