இந்தியா: பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அவசர தேவைகளுக்காக நகைக்கடனை பெரிதும் நம்பி வாழும் நிலையில், ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்ட புதிய நகைக்கடன் விதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த புதிய விதி படி, கடன் காலாவதியான நாளில் வட்டி மட்டும் செலுத்தி நகையை தொடர முடியாது. முழு தொகையையும் — அசலும், வட்டியையும் — ஒரேநாளில் கட்டி, மறுநாளில்தான் மீண்டும் கடன் பெற முடியும். இது மக்கள் மீதான நிதிச் சுமையை அதிகரிக்கச் செய்தது. தங்கத்தின் விலை ஏற்றத்துடன், இந்த நடைமுறை பலரை முறைசாரா கடன், சில்லறை நிதியாளர் போன்ற வழிகளில் செல்ல தூண்டியது.
கூட்டுறவு வங்கிகளில் மேலும் கடுமை
2 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களிடம் மாதந்தோறும் வட்டி கட்ட வலியுறுத்தப்படுவதாகவும், இது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வங்கிகள் விளக்கமளிக்கையில், 2 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு மட்டும் 3 மாதங்களுக்கு ஒரு முறை அசலும் வட்டியும் செலுத்த வேண்டும் என்றதே விதி எனத் தெரிவித்தன.
விமர்சனங்களும் அரசியல் அழுத்தமும்
இந்த புதிய விதிகளைப் பலரும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், பொதுமக்களை கடன் சுழற்சியில் தள்ளும் என்றும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் இந்த விதிகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தினர்.
மத்திய அரசு நடவடிக்கை – விதிகள் நிறுத்தம்
அரசியல் அழுத்தம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் பேரில், உடனடியாக அமலுக்கு வரவிருந்த புதிய நகைக்கடன் விதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 1, 2026 முதல் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலுக்கு வரும் வகையில் பரிசீலனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்ச ரூபாய்க்கு கீழ் நகைக்கடன் பெறுவோர் இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.