ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டது மற்றும் அவதூறாகப் பேசியது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில் நேரில் ஆஜராவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 மற்றும் 3-ல் நீதிபதிகள் முன்னிலையில் அவர் ஆஜரானார். வழக்கு விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கூட்டணிகள் குறித்துத் தனது பாணிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது சுமத்தியுள்ள ஊழல் புகார்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது, “தேர்தல் நேரங்களில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகள் என்பது வழக்கமான வேடிக்கைதான். திருவிழாக்களில் போடப்படும் நாடகத்தைப் போலத்தான் இதையும் பார்க்கிறேன்; அதைப் பார்த்து ரசித்துச் சிரித்துவிட்டுச் செல்ல வேண்டியதுதான்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பாமக – அதிமுக கூட்டணி குறித்துப் பேசிய அவர், அன்புமணி ராமதாஸ் அதிமுக-வுடன் கைகோர்த்தது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றும், அன்புமணிக்கு அதிமுக-வைத் தவிர வேறு வழியில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறித்துச் சீமானிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அரசு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதில் குற்றமில்லை. ஒரு சம்பவம் நடந்தால் விசாரணை செய்வது இயல்பானது. இறுதியில் சிபிஐ என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். இப்போது இதற்கு விரிவாகக் கருத்துச் சொல்லத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த தேர்தலில் 40 தொகுதிகள் மற்றும் ரூ.400 கோடி பணம் தருவதாகக் கூறித் தன்னைத் தூதுவர்கள் மூலம் கூட்டணிக்கு அழைத்ததாகப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியிருந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இது குறித்து நிருபர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியபோது, “அதிமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்துதான் அத்தகைய அழைப்புகள் வந்தன” என வெளிப்படையாகக் கூறினார். “பணம் தருவதாகச் சொன்னது உண்மையா?” என நிருபர்கள் விடாமல் கேட்டதற்கு, “அதெல்லாம் இப்போ இல்லை; அதைப் பற்றிப் பேசத் தேவையில்லை. அத்தகைய ஆசைவார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் நான் மக்களுக்காகத் தனித்து நிற்கிறேன். வேண்டாம் என்று முடிவெடுத்த பிறகு யார் அழைத்தால் என்ன?” எனச் சிரித்தபடி மழுப்பலாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சீமானின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
















