சரத்குமார் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பாஜகவின் துணையோடு தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது பெரம்பூரில் செல்வ பெருந்தகை பேட்டி
பா.ஜ., அரசின் வாக்குமுறைகேடுகளையும் அதற்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, நாடு முழுதும் வாக்குதிருடனே பதவி விலகு என்னும் மாபெரும் பிரசாரத்தை தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில், பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்கை பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
கொட்டும் மழையிலும் காங்., தொண்டர்கள் ஆர்வமுடன் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கண்டனங்களை பதிவு செய்தனர்.
கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து செல்வபெருந்தகை அளித்த பேட்டி:
எங்கள் தலைவர் ராகுல்காந்தி மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும், பத்திரிகையாளர்களிடையேயும் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுதும் ஒரு கோடி கையெழுத்தை பெறப் போகிறோம். நிச்சயம் ஒரு கோடி; லட்சியம் இரண்டு கோடி. இதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளோம்.
நான் இதுவரை ஒரே ஒரு கட்சியில் தான் இருந்துள்ளேன். வேறு எந்த கட்சியில் இருந்தேன் என சரத்குமாரை சொல்ல சொல்லுங்கள் இதற்கு முன் நான் பல்வேறு இயக்கங்களில் இருந்துள்ளேன்.
பொதுவுடைமை சித்தாந்தங்களை உள்வாங்கி அந்த இயக்கங்ளில் இருந்துள்ளன். நான் ஒரு அரசியல் கட்சியில் இருந்துள்ளேன் என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
சரத்குமார் அவரை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நான் யாரையும் கொச்சைப்படுத்தி பேசுபவன் அல்ல. சரத்குமார் முதலில் எங்கிருந்தார். அதன் பின் எங்கு போனார். தி.மு.க., அ.தி.மு.க.,வை தொடர்ந்து, அதன் பின் கட்சி ஆரம்பித்து தற்போது பா.ஜ.,வில் உள்ளார்.
அவர், பா.ஜ.,வில் இருப்பதால் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. பா.ஜ., சொல்வதை கேட்டு தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. டிஜிட்டல் இந்தியா என்று சொல்கிற மோடி, டிஜிட்டல் முறையில் வாக்காளர் ஆவணங்களை தர மறுப்பது ஏன்? பா.ஜ., அரசின் துணையோடு தான் தேர்தல் ஆணையம் தேர்தல்களில் வாக்குதிருட்டை செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
