பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, வாழ்நாள் பொக்கிஷம் ஆனந்த மகிழ்ச்சியில் மூதாட்டி கோவிந்தம்மாள். கண்ணீருடன் சமூக சேவகர் பாரதி மோகனுக்கு நன்றி தெரிவித்து அனைவருக்கும் அறுசுவை விருந்து உபசரித்த பார்வையற்ற மகன். சமூக சேவருக்கு குவியும் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் இரட்டைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் சாலை ஓரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிறவியிலேயே இரண்டு கண்ணும் தெரியாத ஆரோக்கிய ராஜா என்ற மகனை பாதுகாத்து வளர்த்து வருகிறார். மழைக்காலங்களில் தங்க முடியாத வகையில் இவர்கள் வசிக்கும் குடிசை வீடு இடிந்த நிலையில் கூரையைச் சுற்றி தார்ப்பாய் பிளாஸ்டிக் சீட்டால் மூடி வசித்து வருகின்றனர். இவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி மக்கள் இவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில் மயிலாடுதுறை அருகே பெரம்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன் இவர்களது இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று இவர்களின் நிலையை அறிந்து பல்வேறு நபர்களிடம் நிதி திரட்டி 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சீட்டாலான புதிய வீட்டை கட்டி தந்து இன்று கிரகப்பிரவேசம் நடத்தி வைத்தார். இரண்டு கண்களும் தெரியாத ஆரோக்கியராஜா கையால் புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சமூக சேவகர் பாரதிமோகன் வீட்டில் படையல் இட்டு பூஜை செய்து குடும்பத்தினரிடம் வீட்டை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். குக்கிராமங்களில் ஏழ்மை நிலையில் மழைக்காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 18 வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், அவரது இலக்கு இது போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேடி சென்று அவர்களது நிலை அறிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தர வேண்டும் என உறுதிமொழி எடுத்து இதனால் வரையும் அதனை நிறைவேற்றி வருகிறார். அவரது செயல்பாடுகளை கண்ட அப்பகுதி மக்களும் பாரதிமோகனை மனமகிழ்ந்து பாராட்டினர். கோவிந்தம்மாள் மற்றும் அவரது மகன் ஆரோக்கியராஜா ஆனந்தக் கண்ணீரோடு நன்றி தெரிவித்தனர். வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்களுக்கு ஆரோக்கியராஜா தன் கையால் உணவு வழங்கி நெகிழ்ச்சியடைந்தார்.















