சென்னை : நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை நகர சாலைகளில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் ஓடவிருக்கின்றன. மாநகரப் பேருந்து அதிகாரிகள் தெரிவித்ததன்படி, முதற்கட்டமாக 20 மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இவை இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில், பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. மின்சாரப் பேருந்துகள் ஏற்கனவே பல முக்கிய வழித்தடங்களில் ஓடத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ஒருகாலத்தில் 90ஸ் கிட்ஸின் பிரியமானதாக இருந்த டபுள் டக்கர் பேருந்துகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியை போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. மேலடி தளத்தில் பயணிக்கும் அனுபவம், நகரின் உயரமான கட்டிடங்களை ரசிக்க முடிவது போன்ற காரணங்களால், இப்பேருந்துகள் பயணிகளிடையே எப்போதும் தனித்தன்மையுடன் இருந்தன.
மீண்டும் டபுள் டக்கரை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், இயக்கத்திற்கான நடைமுறைகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
17 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம், பிராட்வே இடையில் 18A வழித்தடத்தில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் சாலை மேம்பாட்டு பணிகள், பாலம் கட்டும் பணிகள் காரணமாக சேவை நிறுத்தப்பட்டது.
புதிய டபுள் டக்கர் பேருந்துகள் ஒரு நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. இதனால் நகர போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு அளவுக்கு தீர்வாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக வாங்கப்பட்டுள்ள 20 பேருந்துகளும் விரைவில் சேவைக்கு வரும் என தகவல்.
















