நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். வெளியானதிலிருந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், திரைக்கதை முழுவதும் விறுவிறுப்பாக நகரும் வகையில் அமைந்திருந்தது என்பதே அதன் வெற்றிக்கான முக்கிய காரணமாகும்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, படம் தெலுங்கு மொழிக்கு டப் செய்யப்பட்டு ‘My Baby’ என்ற தலைப்பில் நாளை (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, ‘டிஎன்ஏ’ திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த சூழ்நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்பு திரையரங்கில் வெளியாகும் ஒரு நாளுக்குள் ஓடிடி தளத்திலும் வெளியாக இருப்பது, தெலுங்கு Box Office வசூலுக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தெலுங்கு மொழி ரசிகர்கள் திரையரங்கிற்குப் போவதற்குப் பதிலாக நேரடியாக ஓடிடியில் பார்ப்பதற்கே விருப்பம் காட்டக்கூடும் என்ற அச்சத்தில் படக்குழு இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.