“திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும்… கால் தடம் பதியும் அளவுக்கு பிரசாரம் செய்வேன்” – மன்சூர் அலி கான்

சென்னை: வரவிருக்கும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுகக்கு முழு ஆதரவு வழங்கப் போவதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுடன் இணையும் கட்சிகளை “பாசிச சக்திகள்” என கடுமையாக விமர்சித்தார்.

“நான் சொல்வது மனதில் பட்டதுதான்” “நான் இன்று போராட ஆரம்பித்தவன் இல்லை. 1998-ல் ஆளுநர் மாளிகை 600 ஏக்கரில் இருப்பது ஏன் என்று கேட்டு, அதன் மீது பிரச்சாரம் செய்ததற்காக 35 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறேன். பல கட்சிகளில் இருந்தாலும், நான் ஒருவரையும் ஏமாற்றியதில்லை. யாராவது நடிக்க வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள்; இல்லையென்றாலும் கவலையில்லை. நான் நாட்டின் நலனுக்காக பேசுபவன்.”

பாஜக கூட்டணிகள் மீது குற்றச்சாட்டு

“இந்த நாட்டை நாசமாக்கும் SIR நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். பாஜகவை ஆதரிக்கும், கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பாசிச சக்திகள். அவர்கள் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். 2026-ல் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும். அதற்காக நான் நேரடியாக தரையில் இறங்கி பிரசாரம் செய்வேன்,” என அவர் வலியுறுத்தினார்.

விஜய் குறித்து கருத்து

அரசியல் களத்தில் விஜயுடன் போட்டி குறித்து பதிலளித்த மன்சூர் அலி கான், “விஜயை பார்த்து எனக்கு எந்தப் பயமும் இல்லை. அவர் வானத்தில் சுற்றிக்கொண்டு இருப்பவர். நான் போல் தரையில் கால் வைக்கும் அரசியல்வாதி அல்ல. மக்களிடம் சென்று பேச வேண்டும்; மார்க்கெட், வயல், சாலை என்று எங்கும் கால் பதிக்க வேண்டும். விமானத்தில் வந்துசெல்லும் அரசியல் மக்கள் நலனுக்காக அமையாது,” என கூறினார்.

கரூர் சம்பவம் குறித்து தாம் பேசினபோது, விஜய் அழைத்து பேசாததும் அவர் குறிப்பிட்டார். “விஜயிடம் நிறைய பணம் இருக்கிறது. மக்கள் நலனுக்காக செய்ய வந்திருந்தால் செலவு செய்யட்டும்,” என்றார்.

லோக்சபா தேர்தல் அனுபவம்

2024 லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மன்சூர் அலி கான், ‘பலாப்பழம்’ சின்னத்தில் தீவிரமாக பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் இறுதி நாளில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் குணமடைந்து திரும்பினார்.

அத்துடன், வாக்குப்பதிவு முடிந்ததும், இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் செயல்பட்ட தனது கட்சியை கலைத்து, காங்கிரஸில் இணையவும் அவர் முடிவு செய்தது அந்த நாள்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version