தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு

சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, “உயிரிழப்புகள் நடந்தாலும் காரணங்களை மறைத்து, கதைகள் சொல்லுவதில்தான் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. தவறுகளை ஒப்புக்கொண்டு தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறது,” என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று காலை, சென்னை சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் வசித்து வந்த 40 வயது பெண் ஒருவர், நடைபாதையில் சென்றபோது மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த சூளைமேடு போலீசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் அண்ணாமலை,
“மூடப்படாமல் இருந்த மழைநீர் தொட்டியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனை மாநகராட்சி, வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்துள்ளது. இறந்த பெண்ணின் வாய், கைகள் கட்டப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் புகைப்படங்களில் அவர் துப்பட்டா கையில் சிக்கியதாகவே தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இப்போது மீண்டும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அமைச்சர்களும், மேயரும் சதவீதம் சதவீதமாக கதை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு உயிரிழப்பும் நடந்த பிறகும் விளக்கமளிப்பதில்தான் அரசு ஈடுபடுகிறது,” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர்,
“மழைநீரால் தண்ணீர் தேங்கவில்லை என்று திமுக அரசு புகழ்ச்சி வாங்கினாலும், அரைகுறை பணிகள் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு பொறுப்பேற்கவில்லை. ஜெர்மனியில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் விசாரித்ததாக விளம்பரம் செய்வதைவிட, உயிரிழந்த பெண் குறித்த விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version