2025 ஐபிஎல் தொடரின் முக்கியமான கட்டமாகும் பிளேஆஃப் சுற்றிற்கான சண்டை தீவிரம் அடைந்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப்பிற்குத் தகுதி பெற்ற நிலையில், கடைசி இடத்திற்காக மும்பை, டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இடையே போட்டி நிலவியது.
வாய்ப்பை வீணாக்கிய லக்னோ
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இந்த போட்டியை வென்றால் பிளேஆஃப்பிற்கு நுழைய வாய்ப்பு என்ற நிலைமையில் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது. மார்ஷ் (39 பந்தில் 65) மற்றும் மார்க்ரம் (38 பந்தில் 61) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
ஆனால், அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், தொடர்ச்சியான மோசமான ஃபார்மை தொடர்ந்தார். இவரது சோர்வான ஆட்டத்தால் அணியின் ரன் வேகம் குறைந்தது. பூரன் (45 ரன்) மட்டும் சிறப்பாக விளையாடினாலும், மற்றவர்கள் தொடர்ந்து வெளியேறியதால் 240 ரன்களை நோக்கிய முயற்சி 205 ரன்களில் முடிந்தது.
அபிஷேக் சர்மாவின் அதிரடி – திக்வேஷுடன் மோதல்
இலக்கை அடைவதற்காக களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உடன் 59 ரன்கள் எடுத்தார். அவரை வெளியேற்றிய திக்வேஷ், தனது வாடிக்கையான கொண்டாட்டமான ‘நோட் புக் கையெழுத்து’ மற்றும் ‘வெளியே போ’ என காட்டிய ஆக்ரோஷமான சைகையால் அபிஷேக்கின் கோபத்தை தூண்டினார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து, களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நடுவரும், மற்ற வீரர்களும் தலையிட்டு நிலைமை சீர்படுத்தினார்கள்.
SRH அபார வெற்றி – LSG வெளியேற்றம்
அபிஷேக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, கிளாசன் (47 ரன்) மற்றும் இஷான் கிஷன் (35 ரன்) சுலபமாக இலக்கை அடைய வழிவகுத்தனர். 18.2 ஓவரில் இலக்கை எட்டிய ஹைதராபாத் அணி, லக்னோவை 5வது அணியாக தொடரிலிருந்து வெளியேற்றியது.
இந்த வெற்றியின் மூலம் SRH அணி, லக்னோ மைதானத்தில் அதிகபட்ச ரன்சேஸிங் சாதனை படைத்தது.
மும்பை vs டெல்லி: முடிவு தரும் மோதல்
லக்னோ பிளேஆஃப்பில் இருந்து வெளியேறிய நிலையில், நாளை மறுநாள் நடக்கவுள்ள மும்பை – டெல்லி மோதல் கடைசி பிளேஆஃப் இடத்துக்கான முடிவை தீர்மானிக்கவுள்ளது.