நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதிகளிலும் அரசுத் திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.9.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மலைப்பகுதிகளின் புவியியல் சவால்களுக்கு மத்தியிலும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தரத்தையும், முன்னேற்றத்தையும் அவர் தனிப்பட்ட முறையில் சரிபார்த்தார்.
ஆய்வின் ஒரு பகுதியாக, நெலாக்கோட்டை ஊராட்சியில் ரூ.39.87 லட்சம் மதிப்பிலான மேபீல்டு பள்ளி கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பிலான விளாங்கூர் துணை சுகாதார நிலையக் கட்டுமானத்தைப் பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். குறிப்பாக, பழங்குடியினருக்கான பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் குழிமூலா மற்றும் பந்தகாப்பு பகுதிகளில் தலா ரூ.5.73 லட்சம் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 13 வீடுகளை ஆய்வு செய்த அவர், அவற்றுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டார். மேலும், கலைஞர் கனவு இல்லத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டப் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
பழங்குடியின மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, ஓடோடேம் வயல் பகுதி மக்களின் தேவையை ஏற்று அங்கு ‘நடமாடும் நியாய விலை கடை’ வாகனம் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். மேலும், பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவின் தரத்தைச் சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அகழிப் பணி மற்றும் ரூ.20.10 லட்சம் மதிப்பிலான கொட்டாடு அங்கன்வாடி மையப் பணிகளும் இந்த ஆய்வில் இடம்பெற்றன.
சாலைக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாட்டவயல் மற்றும் சேரங்கோடு ஊராட்சிகளில் சுமார் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் 6.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சாலைப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அனைத்துப் பணிகளையும் தரக் கட்டுப்பாட்டு விதிகளின்படி விரைந்து முடித்து, இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், உதவிப் பொறியாளர் ரமேஷ் மற்றும் இதர அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
















