விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வெம்பக்கோட்டை அணை, முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் கசிந்து வருவதால் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வைப்பாற்றின் குறுக்கே 1986-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 23 அடி உயரம் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து காயல்குடி மற்றும் சீவலப்பேரி கிளை ஆறுகள் வழியாக வரும் நீரைக் கொண்டு இந்த அணை நிரப்பப்படுகிறது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,300 ஹெக்டர் விளைநிலங்கள் இந்த அணையின் பாசனத்தையே நம்பியுள்ளன. குறிப்பாக, இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற பயிர்களை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். மேலும், சிவகாசி மாநகராட்சியின் தாகம் தீர்க்க நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் இந்த அணை திகழ்கிறது.
கடந்த மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், அணையின் ஐந்து மதகுகளில் முதல் மதகின் ஷட்டர் (மதகு கதவு) நீண்ட நாட்களாகப் பழுதாகிக் காணப்படுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20 அடியாக இருந்த நீர்மட்டம், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தண்ணீர் தொடர்ந்து வெளியேறியதால் ஜூன் மாதத்தில் 15 அடியாகவும், அக்டோபரில் 9.5 அடியாகவும் சரிந்தது. தற்போது மீண்டும் பரவலாகப் பெய்த மழையினால் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், பழுதான ஷட்டர் வழியாகத் தடையின்றித் தண்ணீர் கசிந்து வருவதால், நீர்மட்டம் தற்போது 18 அடியாகக் குறைந்துவிட்டது. அணையில் நீர் தேங்க வேண்டிய நேரத்தில், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பல கோடி லிட்டர் தண்ணீர் வீணாக வைப்பாற்றில் கலப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
“விவசாயத்திற்குத் தேவைப்படும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தண்ணீர் இல்லாமல் போனால் எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த ஷட்டர் பழுது குறித்து முறையிட்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நிரந்தரத் தீர்வும் காணவில்லை” என்பது விவசாயிகளின் குமுறலாக உள்ளது. தற்போது மக்காச்சோளம் மற்றும் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்தால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த அணையின் ஷட்டரை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை. தமிழக அரசு தலையிட்டு, அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, பழுதடைந்த மதகுகளை உடனடியாகச் சரிசெய்து விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

















