தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், அடுத்ததாக இயக்கப்போகும் தனது புதிய படத்தை வித்தியாசமாக அறிவித்துள்ளார்.
கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் பார்த்திபன். அவர் இயக்கிய கடைசி படம் இரவின் நிழல் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து டீன்ஸ் என்ற படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன்,
“பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்காரவைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாரும் அமரக்கூடாது என்பதே! போடுங்கம்மா ஓட்டு, Boat சின்னத்தைக் கண்டு! இப்படிக்கு, C.M. சிங்காரவேலன் எனும் நான்… ‘சோத்துக் கட்சி’,” என பதிவிட்டார்.
இதன் மூலம், அவர் தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார். அந்தப் படத்தின் தலைப்பு “நான் தான் CM” என வைக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், அரசியலை மையப்படுத்திய கதை கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.
 
			















