சமூக ஊடக வலைதளங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை நடத்தும் மெட்டா நிறுவனம், தனது செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் குரல் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மெட்டா ஏஐ-யில் குரல் வழங்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கூகுள், ஓபன் ஏஐ, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) போன்ற பல நிறுவனங்கள் தங்களுக்கென ஏஐ அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இத்தகைய போட்டியில், மெட்டா நிறுவனம் புதிய குரல் வசதியை அறிமுகப்படுத்தி, அதன் ஏஐ சாட்பாட்களில் தீபிகாவின் குரலை இணைத்துள்ளது.
தீபிகா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“மெட்டா ஏஐ குடும்பத்தின் ஒரு அங்கமாகியதில் மகிழ்ச்சி. இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில், இனி என் குரலில் ஆங்கிலத்தில் வாய்ஸ் சாட் செய்யலாம்,”
என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பின் மூலம், மெட்டா ஏஐ பயனர்கள் இனி தீபிகா படுகோனின் குரலில் பேசும் அனுபவத்தை பெற முடியும்.