இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகையாவும், பாலிவுட்டின் பன்முக திறமை கொண்ட நட்சத்திரமாகவும் திகழும் தீபிகா படுகோன், தாய்மை பயணம் குறித்த தனது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஹார்பர்ஸ் பஜார் நவம்பர் இதழுக்கான சிறப்பு பேட்டியில், கர்ப்பத்திலிருந்து தொழில் சமநிலையாக்கம் வரை பல அம்சங்களைப் பற்றி அவர் மனம் திறந்தார்.
கர்ப்பத்தை அறிவித்த தருணத்திலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டதாக கூறிய தீபிகா, “தாய்மை பற்றிச் சொல்லப்படும் பல கருத்துகள் உண்மைதான். நான் தாயானபின் தான் என் அம்மாவின் உணர்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டேன்” என தெரிவித்தார். கர்ப்ப புகைப்படங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய தேவை கூட உணரவில்லை எனவும் கூறினார்.
தன் மகள் துவாவுடன் அதிக நேரம் செலவிடும் நோக்கில் பொதுவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்திருப்பதாக விளக்கினார் தீபிகா. இது தனது வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றக் கட்டமாக இருந்ததாகவும், வேலை-தாய்மை சமநிலையைப் பேணுவதில் புதிய தாய்மார்கள் அதிக ஆதரவு பெறுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். “எவ்வளவு திட்டமிட்டாலும், உண்மையான அனுபவம் முற்றிலும் வேறுபடும்,” என்றார்.
சமீபத்தில் சில திரைப்பட திட்டங்களில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். “நாம் வழக்கத்திற்கு மீறிய வேலை நேரத்தையே சாதாரணமாகக் கருதிவிட்டோம். ஆனால் நீண்ட காலம் ஆரோக்கியமாகப் பணியாற்ற, உடல்-மனம் சமநிலை அவசியம். ஒரு நாளின் எட்டு மணி நேரம் போதுமானது,” என கூறினார்.
தனது நிறுவனத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை எட்டு மணி நேர பணிநேரம், அதோடு மகப்பேறு மற்றும் தந்தைவிடுப்பு கொள்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் தீபிகா பகிர்ந்தார். “வேலைக்கும் வீட்டுக்கும் இடையில் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வருவதை இயல்பாக ஏற்க வேண்டிய காலம் இது,” என்று அவர் தெரிவித்தார்.
















