தீபிகா படுகோனேக்கு 2026 ‘ஹாலிவுட் வாக் ஆப் பேம்’ பெருமை!

கலிபோர்னியா : 2026-ம் ஆண்டுக்கான ‘ஹாலிவுட் வாக் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம், இந்த பெருமையை பெற்ற முதல் இந்திய நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா, இந்தியாவிலும், ஹாலிவுட்டிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துள்ள அவர், துவா என்ற பெண் குழந்தையின் தாயாகவும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹாலிவுட் வர்த்தகச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 2026-ம் ஆண்டுக்கான ‘வாக் ஆப் பேம்’ பட்டியலில் மோஷன் பிக்சர் பிரிவில் தீபிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், இந்தக் கௌரவத்திற்கு தேர்வாகும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தீபிகாவுடன், பிரிட்டனில் இருந்து எமிலி பிளண்ட், பிரான்சைச் சேர்ந்த டிமோதி சாலமே, ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் உள்ளிட்டோர் இதே பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார வளர்ச்சியில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது சர்வதேச வரவேற்பை உறுதி செய்யும் மேலும் ஒரு முன்னேற்றமாகும்.

முன்னதாக, 2018-ம் ஆண்டு டைம் பத்திரிகையின் ‘உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள்’ பட்டியலிலும் தீபிகா இடம் பிடித்திருந்தார். மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராகவும் விளங்கியுள்ளார். தற்போதைய இந்த அங்கீகாரம், அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

ஹாலிவுட் வாக் ஆப் பேம் என்றால் என்ன ?

ஹாலிவுட் வாக் ஆப் பேம் (Hollywood Walk of Fame) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது ஹாலிவுட் பவுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் பரவியுள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

1960ல் தொடங்கப்பட்டு, ஹாலிவுட் சேம்பர் ஆப் காமர்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நட்சத்திரம் வழங்கப்படுகிறது. இது உலகளவில் புகழ்பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தை தீபிகா பெறுவது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

Exit mobile version