வங்கக்கடலில் உருவாகிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தினால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமாவது குறித்து வானிலை மையம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த தாழ்வழுத்த அமைப்பு, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவான தாழ்வழுத்த மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், உருவாகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய “சென்யார்” (சிங்கம்) என்ற பெயர் சூட்டப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதியில் கூட ஒரு புதிய தாழ்வழுத்தம் உருவாகக் கூடும் என்பதால், மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் மழை அளவு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் :
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் மற்றும் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
மாநகரமும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இன்று முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும்.
















