விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சிவி சண்முகம் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோலியனூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக சிவி சண்முகம், எஸ்பி.வேலுமணி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். சிவி சண்முகம் அதிமுகவின் தலைமையான பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிவி சண்முகத்திற்கு எதிராக விழுப்புரம் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமையிலான ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் சிவி.சண்முகத்திற்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அதிமுக கோலியனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சிவி.சண்முகத்தின் சுயநலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளதாகவும், இதற்கு சிவி.சண்முகம் தான் பொறுப்பேற்க வேண்டும், அதிமுக பல அணிகள் கிடையாது அதிமுக ஒரே அணியாகதான் உள்ளது, சிவி.சண்முகம். எஸ்பி.வேலுமணி விஜயபாஸ்கர் போன்றவர்களின் சுயநலத்தால், பதவி ஆசையால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அதிமுகவில் பதவி சுகத்தையும், பணத்தையும் சம்பாதித்து விட்டு கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. விரைவில் எடப்பாடி பழனிசாமியால், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி சிவி.சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் மேலும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கட்சிக்கு துரோகம் செய்யும் சிவி.சண்முகம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கண்டிப்பதாகவும், சுனாமி போல வந்த தவெக ஆட்சி, சுனாமி போலவே கலைந்து விடும். மீண்டும் அதிமுக ஆட்சி வருமென கூறினார்.
