
மது அருந்தும் காட்சிகள், அதிக வன்முறை மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், ‘ஏ’ சான்றிதழ் தொடரும் எனத் தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இதனால், 18 வயதுக்குக் குறைவானவர்கள் படத்தைப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு, சன் பிக்சர்ஸ் தரப்பில், “அதிக சண்டைக் காட்சிகள் இல்லாத தமிழ்ப் படங்களை பார்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல், ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. தணிக்கை வாரியம் தெரிவித்த நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன” என வாதிடப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் சார்பில், “படக்குழு முதலில் ‘ஏ’ சான்றிதழை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு, இப்போது ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. குழுக்களின் ஒருமித்த முடிவின்படியே படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு, ‘யு/ஏ’ சான்றிதழுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) தீர்ப்பு வழங்கப்பட்டது. கூலி திரைப்படத்தில் அதிக வன்முறைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளன. எனவே, குழந்தைகள் இப்படத்தை பார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறி, படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் ‘கூலி’ படத்திற்கான ‘ஏ’ சான்றிதழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வணிக ரீதியாகப் படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.