பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலாக இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் முக்கியப்பங்கு வகித்து வெற்றிகரமாக இந்நடவடிக்கையை முடித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த சூழ்நிலையில், மத்தியப்பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா, சோஃபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரி என தவறான குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
விவாதத்திற்குப் பின்னர், அமைச்சர் விஜய் ஷா தனது பேச்சு திரித்துக் கூறப்பட்டதாகவும், தேவைப்பட்டால் “பத்து முறை மன்னிப்புக் கேட்கத் தயார்” என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு எடுத்துக்கொண்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த விஜய் ஷா, இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணை சந்தித்தார். விசாரணையின் போது, நீதிமன்றம், அமைச்சர் கூறிய கருத்துகள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என கண்டனம் தெரிவித்தது. மேலும், அரசியலமைப்புப் பதவிகளில் இருக்கும் நபர்கள் நிதானமான மொழிப்பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதே நேரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவைத் தடை செய்ய வேண்டும் என விஜய் ஷா கோரிய விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.