மயிலாடுதுறையில் 2026 தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நன்மை செய்யாமல் ஊழல் மட்டுமே திமக அரசு செய்துள்ளதாக நிறுவனர் ஈசன் முருகசாமி குற்றசாட்டு:-
மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டையில் திமுகவிற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்திட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தனியார் திருமணக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கோவி. பண்டரிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் கும்கி.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அச்சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டு, தேர்தலில் திமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது, ஏன் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான 36 காரணங்களை முன்வைத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பரப்புரையை தொடங்கியுள்ளோம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு விவசாயிகளும் 1,000 விவசாயிகளை சந்தித்து திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது, அறவழியில் போராடிய விவசாயிகளை சிறையில் அடைத்தது, விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் செய்யாமல் ஊழல் மட்டுமே செய்து, விவசாயிகள் வாழ்வாதாரம் பின்னடைவு அடைய காரணமாக இருந்தது, அமைச்சர், ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தால் எள்ளிநகையாடுவது, அலட்சியப்படுத்துவது ஆகியன நடந்தது.
திமுக ஆட்சிக்குவரும் முன்பு ஒரு அடி நிலம் கூட விவசாயிகள் அனுமதி இன்றி எடுக்கமாட்டோம் என்று முதல்வர் மு.க..ஸ்டாலின் சொன்னார். ஆனால் 1.10 லட்சம் ஏக்கர் நிலம் எடுத்துள்ளனர். 40 இடங்களில் சிப்காட், கிருஷ்ணகிரியில் மட்டும் 40,000 ஏக்கர். தமிழகத்தில் இனாம் நிலம் 13 லட்சம் ஏக்கரை இல்லாமல் செய்துள்ளனர். விவசாயிகளை நிலத்தை அபரகரித்தது திமுக ஆட்சிதான்.
நெல்லுக்கு ரூ.2500 தருவதாக அறிவித்தனர். 5 வருடத்திற்குள் கொடுத்தால்போதுமென்று மத்திய அரசு கொடுக்கும்வரை விலை ஏற்றாமல் இருந்தார்கள் என்பது உதாரணம். 2026 தேர்தல் அறிக்கையில் 61 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்ததற்கு வெள்ளை அறிக்கை கேட்டும் கொடுக்கவில்லை. பயனாளிகள் பட்டியல் கொடுக்க மறுக்கின்றனர். ஊழல் அரசாக, விவசாய விரோத ஆட்சியாக திமுக அரசு இருந்துள்ளது.
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப விவசாயிகள் முடிவெடுத்துள்ளோம். இந்த தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுவோம். எந்த கட்சிக்கு வாக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பது மட்டும்தான் எங்கள் கோரிக்கை. அதிமுக தேர்தல் அறிக்கை 50 சதவீதம் வரவேற்கதக்கதாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் எதுவுமே கிடையாது. நாம் தமிழர் கட்சியில் கள் இறக்க அனுமதி அளிப்போம், விலை நிர்ணயம் செய்வோம் என்று கூறுவது நன்றாக உள்ளது. அதிமுக ஆட்சிக்குவந்து சொன்னதை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம் திமுக தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டபோது மத்திய அரசு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக முதல்வர் சொல்கிறார். மத்திய கூட்டுறவு அமைப்பு எல்லா மாநிலங்களிலும் செயல்படுகிறது அதற்குத்தான் தள்ளுபடி. மாநில கூட்டுறவு அமைப்புகள் எல்லா மாநிலத்திலும் உள்ளது.
குஜராத் அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் மாநில கூட்டுறவுத் துறையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று தீர்ப்பு உள்ளது. பொய் வாக்குறுதியாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. முதல்வர் கருத்து தவறானது கண்டிக்கத்தக்கது. 50 வகையான மானிய திட்டங்களை வைத்திருந்தனர். பொதுகணக்கில் இருந்ததை தனிக்கணக்கு என்று வேளாண்மை பட்ஜெட் அறிவித்தனர். 1 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடம் 30 ஆயிரம் கோடி மானியத்திற்காக ஒதுக்கி உள்ளனர். அனைத்தும் ஊழல் பொருள். தரமான பொருளாக வழங்கவில்லை. டிராக்டர், டில்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்குவதில் கடுமையான ஊழல், திமுக ஒன்றிய, மாவட்ட செயலாளர்களுக்கு பணம் கொடுத்தால் மானியத்தில் கிடைக்கும். முழுக்க முழுக்க ஊழல் செய்துள்ளனர். தனிநிதிநிலை அறிக்கை கொடுத்ததால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
