மயிலாடுதுறையில் திருமணம் செய்த சிறுமியை சாலையில் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சிறுமியோடு தலைமறைவான கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் மகன் சுகுமாறன்(27). கட்டட தொழிலாளியான இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் வேலை பார்த்தபோது, அங்கு கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். பின்னர் தொடர்ந்து சிறுமியிடம் செல்போனில் பேசிவந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தேனியில் இருந்து அழைத்து வந்து திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை சாலையில் அடித்து துன்புறுத்தியபோது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை செய்ய சென்றபோது சுகுமாறன் சிறுமியுடன் தலைமறைவானார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சுகுமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். .

















