சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்திற்கு எதிராக புகார் – ரிலீஸ் தேதியில் மாற்றம் வருமா ?

சென்னை :
நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘மதராஸி’ திரைப்படத்திற்கு வழக்குத் தோன்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கையைச் சேர்ந்த ஐங்கரன் மீடியா சொல்யூஷன் நிறுவனம், இலங்கையின் தென்னிந்திய துணைத் தூதரகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த புகாருக்கு 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படம், செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது, திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘மதராஸி’ படத்தின் சில முக்கிய காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெற வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும், ஐங்கரன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் கார்த்திக் என்பவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதில், படக்குழுவினருக்கு தங்குமிடம், படப்பிடிப்பு தள வசதி உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவைகளுக்காக வரையறுக்கப்பட்ட தொகையான 1 கோடி 75 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்), அல்லது 5 கோடி 37 லட்சத்து 80 ஆயிரத்து 489 ரூபாய் (இலங்கை மதிப்பில்) செலவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகைக்கு பணம் செலுத்தப்படவில்லை என்றும் அதனால் தான் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தீர்க்கப்படவில்லையெனில், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது தற்போது சந்தேகமாக உள்ளது

Exit mobile version