ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் எழுந்துள்ள மிகப்பெரிய சவாலான ‘தாமரை மாஃபியா’ விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட குளங்களுடன் ‘நீர் வளத்தின் சொர்க்கமாகத்’ திகழ்ந்த குமரி மாவட்டத்தில், முறையான தூர்வாரும் பணிகள் நடைபெறாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் நீர்நிலைகள் சுருங்கிப் போய்விட்டன. பல குளங்கள் கட்டிடங்களாகவும், பேருந்து நிலையங்களாகவும், வணிக வளாகங்களாகவும் உருமாறிய நிலையில், தற்போது எஞ்சியுள்ள சுமார் 2,200 குளங்களும் முறையான பராமரிப்பின்றி ‘தாமரை’ வளர்க்கும் சட்டவிரோதக் கும்பல்களின் பிடியில் சிக்கியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகளைக் காற்றைப் பறக்கவிட்டு, குளங்களில் அனுமதியின்றி ‘ஹைப்ரிட்’ ரகத் தாமரை விதைகள் தூவப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் தாமரைகளை ரவுடி கும்பல்களின் துணையோடு பறித்து, பல லட்ச ரூபாய்க்கு முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர். அதிர்ச்சிகரமான தகவலாக, தாமரையின் வளர்ச்சியை அதிகரிக்கவும், குளத்திலுள்ள மற்ற இயற்கை தாவரங்களை அழிக்கவும் ‘ஆசிட்’ போன்ற நச்சுத்தன்மை கொண்ட களைக்கொல்லிகளை இக்கும்பல் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குளத்தின் நீர்நிலையை நஞ்சாக்குவதோடு, மீன் வளத்தையும் முற்றிலுமாக அழித்து வருகிறது.

இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை மெத்தனமாகச் செயல்பட்டு வந்த நிலையில், உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதார மீட்டெடுக்கும் போராட்டக்குழுத் தலைவரும், தோவாளை உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான சகாயம் தலைமையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி தாமரை வளர்க்கத் தடை விதிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்தத் தொடர் அழுத்தத்தின் பலனாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தற்போது ஒரு தீர்க்கமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கலெக்டரின் உத்தரவுப்படி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது புகார் அளித்து வருகின்றனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இத்தகைய புகார்கள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்வளத்துறையும் காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் தாமரை வணிக மாஃபியாவை வேரோடு அறுக்க முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version