கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, மன்சூர் அலிகான், எஸ்.ஏ. சந்திரசேகர், விக்ரமன், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசும்போது இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், “எனக்கு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளின் மீது இருக்கும் கோபத்தை திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு எனக்குக் கிடைத்த சக்திவாய்ந்த ஹீரோ விஜயகாந்த் தான். அவரைத் தவிர வேறு யாரையும் தேடிப்போகவில்லை.
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒருகாலத்தில் வெற்றிப்படங்களை கொடுத்தாலும், செலவு அதிகம் என்பதால் தயாரிப்பாளர்கள் அச்சப்பட்டனர். ஆனால், தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்தவர்களில் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முக்கியமானவர்கள்,” என்றார்.
விஜயகாந்தின் தன்மையைப் பற்றி அவர் மேலும் கூறும்போது, “கேப்டன் பிரபாகரன் வெற்றிபெற்றபின், பிற இயக்குநர்களை பெயரால் அழைத்தாலும், என்னை மட்டும் ‘டைரக்டர் சார்’ என்று மரியாதையுடன் அழைப்பார். அவருக்கு நன்றி, மனிதம் என்றால் அதற்கான அர்த்தமே விஜயகாந்த். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் போதும், பின்னர் பெரியண்ணா படத்தின் போதும், அவர் என்னிடம் காட்டிய மரியாதை மாறவில்லை,” என்றார்.
தனது மகன் விஜயின் சினிமா பயணத்தை நினைவுகூர்ந்த அவர், “விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு. 70 லட்சம் செலவில் எடுத்தாலும் வெற்றிபெறவில்லை. அவரை வளர்க்க ஒரு பெரிய நடிகருடன் நடிக்க வைக்க விரும்பினேன். பலரும் மறுத்தபோது விஜயகாந்திடம் கேட்டேன். அவர் உடனே, ‘எப்போது வேண்டுமானாலும் கால்சீட் எடுக்கலாம்’ என்று சொன்னார்.
செந்தூரப்பாண்டி படத்தில், 17 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் சூப்பர் ஹிட்டாகி, மிகப்பெரிய லாபம் வந்தாலும், ஒரு பைசாவும் அவர் எடுக்கவில்லை. நன்றி தெரிவிக்க, என் வீட்டருகிலிருந்த காலி இடத்தை அவரின் பெயரில் பத்திரம் பதிவு செய்தேன். அதற்கும் அவர் கோபப்பட்டார். எங்கள் உறவு நட்பைத் தாண்டியது. அவர் எப்போதும் என் மனதில் தனி இடம் பிடித்தவர்,” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
விழாவின் முடிவில், “இந்தப் படம் வெளியான பிறகு, தயாரிப்பாளர்கள் ஆர்.கே. செல்வமணியை தேடிச் செல்வார்கள்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.