சென்னை:
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று போராட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சமூக நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பாஜக சார்பில் கரு. நாகராஜன், புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், “சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்”, “சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்” உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ்,
“தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம். ஆனால், திமுக ஆட்சியில் சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக பாமக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த முடியும் என திமுக அரசு தொடர்ந்து பொய் கூறி வருகிறது” என குற்றம்சாட்டினார்.
மேலும்,
“தற்போது நடைமுறையில் உள்ள சாதிவாரி கணக்கு 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றளவும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரத்தை அறிய புதிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” எனத் தெரிவித்தார்.
பிகார் மாநிலத்தை உதாரணமாகக் காட்டிய அவர், “பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதுவே நிதிஷ் குமார் தேர்தலில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இடஒதுக்கீட்டுக்காக மட்டும் அல்ல; சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு தற்போது ஆபத்தில் உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டுமெனில், சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடித்து வருகிறார்” எனவும் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 12 ஆம் தேதி ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் தனியாக போராட்டம் நடைபெற்றுள்ளது.















