தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார் (26), சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையின் அருகே மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த கவினை, வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்ற பின்னர், அதே தெருவில் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாளையங்கோட்டை சேர்ந்த சுர்ஜித் (24) என்பவர்தான் இந்த கொலை செய்ததாக தெரியவந்தது. காதல் தொடர்பை தடை செய்ய எச்சரிக்கையை கவின் புறக்கணித்ததாகவும், இவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கொலை செய்ததாகவும் சுர்ஜித் வாக்குமூலம் அளித்தார். அவரை போலீசார் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் – ராஜபாளையம் மற்றும் மணிமுத்தாறு பட்டாலியன்களில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர்களாக இருந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி – இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது தூண்டுதல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு, அவரது உடலை வாங்க மறுத்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, 5 நாள் போராட்டத்திற்கு பிறகு, கவின் பெற்றோர் உடலை பெற்றுக்கொள்வதில் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி பயணத்தின்போது, கவின் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினரிடம் முதல்வர் நேரடியாக பேசி, தங்களின் ஆதரவை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.