குறுக்கே வந்த பைக் – திடீர் பிரேக் அடித்த சிமெண்ட் வாகனம்- பிரேக் பிடிக்காமல் மோதிய அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறல்- பயணிகள் காயம்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு TN 68 N 0535 என்ற எண் கொண்ட பேருந்து தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சென்று வருவது வழக்கம். அதேபோல இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால் 52 பயணிகளுடன் பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது.
இந்த அரசு பேருந்துக்கு முன்பு சிமெண்ட் கலவை இயந்திர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, விளமல் பேருந்து நிறுத்தத்தை கடந்து அரசு பேருந்து சென்றபோது முன்னால் சென்ற சிமெண்டு கலவை வாகனம், இணைப்பு சாலையில் இருந்து வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த திடீர் சம்பவத்தை எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுநர் அவசரகால பிரேக் கை அழுத்தி பேருந்தை நிறுத்த முயற்சித்த போது அது வேலை செய்யாமல் முன்னால் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை வாகனம் மீது மோதியது. இதில் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதனால் பேருந்தில் முன்புறத்தில் அமர்ந்து பயணித்து கொண்டிருந்த இரண்டு பெண் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் பேருந்து விடியல் பேருந்து என்பதாலும், பழைய பேருந்து என்பதாலும் பேருந்து முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது என பயணிகள் குற்றம் சாட்டினர்
இந்த பேருந்து விபத்து நடைபெற்ற நேரத்தில், சேலத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விடியல் பேருந்து தான் வெற்றிபெற போகிறது என்று பேசினார். ஆனால் அவர் பேசிய நேரத்தில் திருவாரூரில் விடியல் பேருந்து விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
