திருச்சியில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு : விஜய் பிரச்சாரத்திற்கு முன் போலீஸ் நடவடிக்கை

திருச்சி: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருக்கு எதிராக திருச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூட்டம் சேர்த்தல், சாலை மறியல் மற்றும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கியக் கட்சிகளுடன் தவெகவும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. நடிகர் விஜய், தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைக்காமல் தாமதமாகி வருவதாக தவெகவினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த் நேரடியாக சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி கோரியிருந்தார்.

செப்டம்பர் 6 ஆம் தேதி திருச்சி வந்த புஸ்ஸி ஆனந்த், விமான நிலையம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் பிரார்த்தனை செய்தபோது ஏராளமான தவெகவினர் கூடியிருந்தனர். அப்போது, திருச்சி–புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் எச்சரித்தும், தவெகவினர் அதை பின்பற்றவில்லை. சிலர் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் கரிகாலன், துளசி மணி, செந்தமிழ், மோசஸ் உள்ளிட்டோருக்கு எதிராக நான்கு பிரிவுகளின் கீழ் திருச்சி விமான நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விஜயின் பிரச்சார சுற்றுப்பயணம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தவெகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version