மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ.60 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் தீபக் கோத்தாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
லோட்டஸ் கேபிடல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான தீபக் கோத்தாரி, 2015 ஆம் ஆண்டு ராஜேஷ் ஆர்யா என்ற நபர் மூலம் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது, அவர்களது Best Deal TV Pvt Ltd என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு தொழில் விரிவாக்கத்திற்காக முதலீடு செய்யும்படி கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடனாக கேட்டது – முதலீடாக பெற்றது
கோத்தாரியின் புகாரின்படி, 2015 ஆம் ஆண்டு ஷில்பா – குந்த்ரா தம்பதியினர் ரூ.75 கோடி கடனாக தருமாறு விண்ணப்பித்துள்ளனர். 12% வட்டி விகிதத்துடன் கடனாக வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை “முதலீடு” என்ற பெயரில் பெறும்படி கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இறுதியில், 2015 முதல் 2023 வரை பல தவணைகளில் ரூ.60 கோடி அளவில் நிதி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தொகை நிறுவன வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படாமல், தனிப்பட்ட செலவுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நிறுவனம் திவால் – தொகை திரும்பவில்லை
Best Deal TV நிறுவனத்தில் ஷில்பா ஷெட்டி 87% பங்குகளை வைத்திருந்தார். தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை. நிறுவனத்தின் திவாலான நிலைமையால், தானளித்த பணம் திரும்ப பெற முடியவில்லை என்று கோத்தாரி புகாரில் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை மறுத்த தம்பதி
இந்த குற்றச்சாட்டுகளை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதியினர் முழுமையாக மறுத்துள்ளனர். அவர்களது தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், “இந்த வழக்கில் எந்தவித குற்றமும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
முன்னைய சர்ச்சைகள்
முன்னதாகவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷில்பா – குந்த்ரா தம்பதியினர் மோசடி வழக்கில் சிக்கியிருந்தனர். மேலும், ராஜ் குந்த்ரா 4 ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷில்பா ஷெட்டி தமிழ் திரைப்படங்களில் மிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.