சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்காக அதிக அளவில் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கட்சிக்குள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, கரூரில் விஜய் தலைமையில் நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு தவெக ஒரு மாதம் வரை எந்த பொதுக்கூட்டமோ, செய்தியாளர் சந்திப்போ நடத்தவில்லை. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் விஜய் நேரில் சந்தித்து நிவாரண வாக்குறுதிகளை அளித்தார்.
அதன்பின் கட்சித் தலைமையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், இப்போது நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஏராளமான பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநாட்டிலும் பவுன்சர்களின் நடத்தை குறித்து தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேபோல், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்த நிகழ்ச்சியிலும், கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமனையே பவுன்சர்கள் அடையாள அட்டை இல்லாததால் தடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தொண்டர்கள் பவுன்சர் அணியை குறைத்து, தன்னார்வலர் அணியை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அதற்கேற்ப விஜய் தொண்டர் அணியை மாவட்ட வாரியாக அறிவித்திருந்தாலும், இன்றைய கூட்டத்தில் மீண்டும் பவுன்சர் படை களமிறங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால், “தவெகவில் பவுன்சர் அணியே முக்கியம்!” என்று சில எதிர்க்கட்சியினரும் சமூக வலைதளங்களிலும் கிண்டல் பதிவுகள் எழுந்துள்ளன. கட்சிக்குள் இருந்து கூட, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பவுன்சர்களின் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
