தேனி மாவட்டம் போடியில் உள்ள ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில், அரையாண்டுத் தேர்வு விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, சமூக நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குளிர்கால முகாம் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில், சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளுடன், நாட்டுப்புற நடனம், ஓவியம், இசை மற்றும் யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளுக்கு வல்லுநர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குத் தமிழர்களின் பாரம்பரியத் தொழிலான மண்பாண்டக் கலையை அறிமுகப்படுத்தும் விதமாகச் சிறப்புப் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் போது, மாணவர்கள் போடி குலாலர் பாளையத்தில் உள்ள மண்பாண்டம் தயாரிக்கும் கூடத்திற்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு களிமண்ணைப் பயன்படுத்திச் சிற்பங்கள் செதுக்குவது, அழகிய அகல் விளக்குகள் செய்வது மற்றும் சக்கரத்தைச் சுழற்றி மண்பாண்டங்களை உருவாக்குவது குறித்த நேரடிப் பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நவீனக் காலத்திலும் இயற்கை சார்ந்த மண்பாண்டங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் பின்னால் உள்ள கலை நுணுக்கங்களை மாணவர்கள் வியப்புடன் கேட்டறிந்தனர்.
இந்தச் செய்முறைப் பயிற்சியில் சுமார் 65-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது கைகளால் களிமண் உருவங்களைச் செய்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வின் போது நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயப்பிரகாஷ், உப்புக்கோட்டை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஏ.ஹைச்.எம் (AHM) டிரஸ்ட் அமைப்பாளர் வினிதா ஆகியோர் உடனிருந்து மாணவர்களை வழிநடத்தினர். விடுமுறை நாட்களில் இது போன்ற ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, மறைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் ஒரு பாலமாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

















