உத்தரபிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பரதபூர் கிராமம் அருகே கவுடியாலா ஆற்றில் நடந்த படகு விபத்தில் எட்டு பேர் மாயமாகியுள்ளனர்.
மொத்தம் 22 பேரை ஏற்றிச் சென்ற படகு, ஆற்றின் நடுவில் திடீரென கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து குழந்தைகள் உட்பட எட்டு பேர் இன்னும் காணாமல் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள 13 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆற்றில் ஏற்பட்ட அதிக நீரோட்டமே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகு கவிழ்ந்ததற்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

















