சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அதனை உறவினர்கள் மறுத்துள்ளனர்.
‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தனித்த அடையாளம் பெற்றவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ், கடந்த மார்ச் மாதம் காலமானது குறிப்பிடத்தக்கது. அந்த இழப்புக்குப் பிறகு பாரதிராஜா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை உறவினர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆரம்பத்தில் ஓய்வில் இருந்த அவருக்கு, பின்னர் வீசிங் உள்ளிட்ட சுவாச தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதற்காக மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
பாரதிராஜாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார்” என தெரிவித்துள்ளனர்.
