“வடக்கன் போல் இருக்க…” ஓட்டுநரின் பேச்சால் அதிர்ச்சி – காயமடைந்த கூமாபட்டி தங்கபாண்டி

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி, சமூக வலைதளங்களில் “ஏங்க” என்ற வசனத்தால் புகழ்பெற்றவர். சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்து, இன்று அதிகாலை ஆம்னி பேருந்தில் சொந்த ஊருக்கு வந்த தங்கபாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் இயற்கை உபாதைக்காக பேருந்திலிருந்து இறங்க முயன்றார். அந்த நேரத்தில் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், கதவு பகுதியில் மோதி கீழே விழுந்தார்.

இதில், தங்கபாண்டியின் இடது கை தோள்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தங்கபாண்டி தெரிவித்ததாவது :
“வலியால் தாங்க முடியாமல் இருந்தபோது, ஓட்டுநரிடம் சொன்னேன். ஆனால் அவர் என்னை ‘வடக்கன் மாதிரி இருக்க’ என்று சொல்லி, கடுமையாக நடந்துகொண்டார்” என்றார்.

இதுகுறித்து தங்கபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version