கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள், ஐடி ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.
அந்தச் சம்பவத்தில், ஐடி ஊழியர் தனது காரில் புறப்பட முயன்றபோது, லட்சுமி மேனனுடன் இருந்த சிலர் அவரை தங்கள் காரில் ஏற்றி சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவத்துக்குப் பிறகு, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஊழியர் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், நடிகை லட்சுமி மேனன் உட்பட நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆள் கடத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை, இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், நடிகை லட்சுமி மேனன் மீது இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் லட்சுமி மேனனுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

















