ரசிகரை கடத்தி கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் மீது பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.
நடிகர் தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டியதாகக் கூறப்படும் அவரது ரசிகர் ரேணுகாசாமி, கடந்த ஜூன் மாதம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா, தர்ஷனின் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றம் தர்ஷன் உட்பட 10 பேருக்கு ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பர்திவாலா, மகேந்திரன் ஆகிய நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடந்தது.
அப்போது, தர்ஷனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். “அவர் பிணையில் வெளியே இருந்தால் சாட்சிகளை பாதிக்கும் சூழல் ஏற்படும்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் ஜாமின் உத்தரவினை ரத்து செய்தனர்.
இதையடுத்து, இன்று பெங்களூருவில் தர்ஷனை போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.