தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ள நிலையில், மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் எம்.பியை செல்போனில் தொடர்புகொண்டு திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதாக பேசி வறுத்தெடுத்த திமுக தொண்டர்:- கட்சி எடுத்த முடிவு ஒரு துரோகமும் இல்லை என எம்எல்ஏ பேசிய ஆடியோ வைரல்:-
மயிலாடுதுறை மக்களவை தேர்தலில் இத்தொகுதிக்கு அறிமுகம் இல்லாத கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சுதா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பியாக உள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்ற திமுக நிர்வாகிகளின் வேண்டுகோளை புறக்கணித்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. இதிலும், தொகுதி மக்களுக்கு அறிமுகம்; இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜமால் முகமது யூனூஸ் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வேறு வழியின்றி திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் தேர்தல் பணியாற்றியதில், 10,845 வாக்குகள் வித்தியாசத்தில் ஜமால் முகமது யூனூஸ் வெற்றி பெற்றார். வெற்றியடைந்து சான்றிதழ் பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜமால் முகம்மது யூனூஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்கள்தான் தன்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க கூடுதலாக 11 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது திமுக நிர்வாகிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மறையூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் மோதிரம் கணேசமூர்த்தி என்பவர் மயிலாடுதுறை எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ் ஆகிய இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களை கஷ்டப்பட்டு ஜெயிக்க வைத்தோம், இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே, நியாயமா? என்று கேட்க, எம்பி சுதா நான் நேரில் வந்து பேசுகிறேன் என தெரிவித்து செல்போனை துண்டித்தார். தொடர்ந்து எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ்சிடம் உங்களை ஜெயிக்க வைப்பதற்காக எவ்வளவு உழைத்திருப்போம், அசால்ட்டா போய்ட்டீங்க என்று தனது வேதனையை வெளிப்படுத்திய போது, நான் எடுத்த முடிவு இல்லை, அதெல்லாம் ஒரு துரோகமும் இல்லை, நேரில் வந்து பேசுகிறேன் என கூறி உரையாடலை துண்டிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.
