தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் இணைந்து உருவாக்கும் புதிய படம் ‘AA22 x A6’ என்ற தற்காலிக பெயரில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
‘ஜவான்’ படத்தின் வெற்றிக்கு பின் அட்லீயும், ‘புஷ்பா 2’ வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுனும் இணைவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகிறது.
மும்பை ஷெட்யூல் நிறைவு
இந்தப் படம் ஜூன் மாதம் மும்பையில் தொடங்கியிருந்தது. தொடர்ந்து 50 நாட்கள் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஆக்ஷன் காட்சிகளும், நடன காட்சிகளும் முக்கியமாக எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அபுதாபி ஷெட்யூல் அடுத்த கட்டம்
அடுத்த கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடைபெறவுள்ளது. அங்கு பாலைவனப் பகுதிகளில் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்தக் காட்சிகளில் தீபிகா படுகோனேவும் பங்கேற்கிறார்.
அல்லு அர்ஜுனின் மூன்று வேடங்கள்
இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாகும் காட்சிகளுக்காக Lola VFX மற்றும் Fractured FX போன்ற முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் இணைந்துள்ளன. அதற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனேவின் அசைவுகள், தோற்றங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு பிரபலங்கள் இணைப்பு
தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனும் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், படத்தின் வில்லனாக ஒரு ஹாலிவுட் நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
			















