சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம், நகரத்தார்களின் ஒன்பது திசைக்கோயில்களில் முதல் கோயிலான இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டின் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாகவே கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், வாகனப் புறப்பாடுகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, நேற்று காலை முதலே கைலாசநாதர் சுவாமிக்கும் நித்திய கல்யாணி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் சுவாமியும் அம்பாளும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க சுவாமி – அம்பாள் திருக்கல்யாணம் முறைப்படி நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி” என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்தவுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குத் திருமாங்கல்யப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இளையாத்தங்குடி கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நகரத்தார்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனத்தின் சிகர நிகழ்வான நடராஜப் பெருமானின் திருமஞ்சனம் மற்றும் திருவெம்பாவை பாடல்களுடன் கூடிய தரிசன வைபவம் நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவினால் இளையாத்தங்குடி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.













